உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங் ரஹி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். 2022-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர், கடந்த ஆண்டு ஷாஜகான்பூரில் துணை ஆட்சியராக இருந்தபோது பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களுக்கு தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை கொடுத்தார்.

இதில் வழக்கறிஞரின் உதவியாளர் ஒருவரும் இருந்ததால், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ரிங்கு சிங் ரஹி தானும் பகிரங்கமாக தோப்புக்கரணம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டு, எந்தப் பொறுப்பும் இல்லாத ஒரு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த பல மாதங்களாகத் தனக்கு எந்த வேலையும் வழங்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டதே தனது ராஜினாமாவுக்கு முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பு இல்லாத இடத்தில், சும்மா இருந்து சம்பளம் வாங்குவது தனது மனசாட்சிக்குச் சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு 100 கோடி ரூபாய் ஊழலை வெளிப்படுத்தியபோது, இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு 7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டார். ஊழலுக்கு எதிராகப் போராடி உயிர் பிழைத்த ஒரு நேர்மையான அதிகாரி, தற்போது நிர்வாகக் காரணங்களால் தனது பணியைத் துறந்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.