ஈரான் – அமெரிக்கா இடையிலான போரில் நேட்டோ நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ மறுத்ததால், அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். குறிப்பாக, ஈரானால் முடக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க போர் கப்பல்களை அனுப்ப நேட்டோ நாடுகள் மறுத்துவிட்டன.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், நேட்டோ அமைப்பை ஒரு “காகிதப்புலி” என்று விமர்சித்துள்ளார். உக்ரைன் விவகாரம் போன்ற மற்ற நாடுகளின் பிரச்சினைகளில் அமெரிக்கா தானாக முன்வந்து உதவிய போது, தற்போது அமெரிக்காவிற்குத் தேவைப்படும்போது இந்த நாடுகள் பின்வாங்குவது ஏற்கத்தக்கதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மரையும் கடுமையாக விமர்சித்துள்ள டிரம்ப், பிரிட்டனிடம் முறையான கடற்படை கூட இல்லை என்று சாடியுள்ளார். இதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், நேட்டோ என்பது ஒருதலைப்பட்சமான உறவாக மாறிவிட்டதாகக் கூறியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கச்சா எண்ணெயைச் சார்ந்துள்ள நாடுகள், இனி தங்களின் பாதுகாப்பைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கா இனி அங்கே உதவிக்கு இருக்காது என்றும்டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.