*——————அதிர்ஷ்டம் என்பது எப்போது, யார் கதவைத் தட்டும் என்று சொல்ல முடியாது என்பதற்கு உதாரணமாக அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள லேக் கவுண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், கடந்த மார்ச் 14-ம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்குவதற்காக ஒரு கடைக்குச் சென்றுள்ளார்.
அவர் ஐந்து 1 டாலர் டிக்கெட்டுகளையும், ஒரு 5 டாலர் டிக்கெட்டையும் கேட்ட நிலையில், அங்கிருந்த ஊழியர் கவனக்குறைவாக 10 டாலர் மதிப்புள்ள ஒரே ஒரு ‘குயிக் ஸ்பாட்’ (Quick Spot) டிக்கெட்டை அவரிடம் கொடுத்துவிட்டார்.
பொதுவாக இதுபோன்ற நேரங்களில் பலரும் வாக்குவாதம் செய்து டிக்கெட்டை மாற்றுவார்கள், ஆனால் அந்த நபர் ‘சரி கிடைச்சது கிடைக்கட்டும்’ என்று அந்தத் தவறான டிக்கெட்டையே வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அந்த ஒரு முடிவுதான் அவர் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அவர் வாங்கிய அந்தத் தவறான டிக்கெட்டில் இருந்த எண்கள் அனைத்தும் ஜாக்பாட் எண்களுடன் கச்சிதமாகப் பொருந்த, அவருக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் (1,58,585 டாலர்) பரிசு விழுந்துள்ளது.
இதில் ஹைலைட் என்னவென்றால், அவர் முதலில் கேட்ட டிக்கெட்டுகளை வாங்கியிருந்தால் அவருக்குப் பரிசில் ஒரு சிறு பகுதி மட்டுமே கிடைத்திருக்கும்,
ஆனால் கடைக்காரர் செய்த தவறால் 100 சதவீத ஜாக்பாட் தொகையும் அவருக்குக் கிடைத்துள்ளது. இந்தத் திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடிப் போன அந்த நபர், இந்தப் பணத்தை வைத்து தனது கடன்களை அடைக்கவும், தனது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யவும் போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.**
