கேரளம் மாநிலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கொக்கைன், கஞ்சா, மெத்தபெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷாஜி பெர்னாண்டோ உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் வழக்கறிஞர், பல் மருத்துவர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் கல்லூரி மாணவர் எனப் படித்த இளைஞர்களும், மூன்று பெண்களும் அடங்குவர். இந்த போதைப்பொருட்களை விநியோகம் செய்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷோன் என்பவர் தப்பியோடியதால், அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு சில ஓட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
