தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்க, வருகிற 1-ந் தேதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இனி ஒவ்வொரு பரிவர்த்தனையும் எங்கிருந்து செய்யப்படுகிறது என்பது தீவிரமாகச் சரிபார்க்கப்படும் என்பதுடன், பாதுகாப்பு கருதி வங்கிச் செயலிகளில் ஸ்கிரீன் ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியாது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையில்லாத நேரங்களில், குறிப்பாக இரவு நேரங்களில் பணப் பரிவர்த்தனைகளைத் தாங்களாகவே முடக்கி வைத்துக் கொள்ளலாம்.
மேலும், எஸ்.எம்.எஸ் மூலம் ஓ.டி.பி அனுப்பும் முறை மாற்றப்பட்டு, இனி அந்தந்த வங்கிச் செயலிகளிலேயே ஓ.டி.பி பெறும் வசதி அறிமுகமாகிறது. ஒருவேளை உங்கள் மொபைலில் ஏதேனும் மோசடிசெயலிகள் இருந்தால், வங்கிச் செயலி உடனடியாக உங்களை எச்சரிக்கும்.
பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அனுப்பினால் பாதுகாப்பு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும்; 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அனுப்ப ஆதார் இணைப்பு, கைரேகை அல்லது முக ஸ்கேன் போன்றவை கட்டாயமாக்கப்படலாம்.
நீங்கள் திரையைத் தட்டச்சு செய்யும் வேகம் மற்றும் கையாளும் விதத்தைக்கூட பயோமெட்ரிக் தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து, அது நீங்கள்தான் என்பதை வங்கி உறுதி செய்யும். இத்தகைய மாற்றங்கள் மூலம் மோசடி நபர்கள் உங்கள் ரகசிய எண்களைத் திருடிப் பணத்தைப் பறிப்பது முற்றிலும் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
