கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீனிவாஸ் லூயிஸ் என்ற முதுநிலை பட்டதாரி இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மிரட்டல் செய்திகளை ஆய்வு செய்த டெல்லி போலீசார்,
மைசூர் போலீசாரின் உதவியுடன் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தி லூயிஸைக் கைது செய்தனர். யாரிடமும் அதிகம் பேசாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த இவர், தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்ததும், தொழில்நுட்ப அறிவை தவறாகப் பயன்படுத்தி இந்தச் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
போலீசார் அவரிடமிருந்த லேப்டாப் மற்றும் சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 1,100 போலி வெடிகுண்டு மிரட்டல்களை அவர் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. வேலை கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே இது போன்ற மிரட்டல்களை விடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு பட்டதாரி இளைஞர் இத்தகைய விபரீதச் செயலில் ஈடுபட்ட சம்பவம் மைசூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
