அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சுமார் 7.30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல் கியூபாவின் மடன்சாஸ் துறைமுகத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூபா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளால், அந்நாடு கடும் மின் தட்டுப்பாட்டிலும் எரிபொருள் பற்றாக்குறையிலும் தவித்து வருகிறது.

ஏற்கனவே ஒரு ரஷ்ய கப்பல் கியூபாவை அடைந்துள்ள நிலையில், தற்போது இரண்டாவது கப்பலும் தடையின்றி செல்வது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கக் கடலோரக் காவல் படை அருகே இருந்தும், மோதலைத் தவிர்க்க மேலிடத்திலிருந்து எந்த உத்தரவும் வராததால் ரஷ்ய கப்பலை அவர்கள் தடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உக்ரைன் போர் மற்றும் ஈரானுடனான நேரடி மோதலில் அமெரிக்கா ஏற்கனவே சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவுடன் மற்றொரு புதிய முனையில் மோத டிரம்ப் நிர்வாகம் தயங்குவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

கியூபா மீதான அமெரிக்காவின் தடைகள் தவறானவை என்றும், தங்களது நட்பு நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும் ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த எரிபொருள் வருகை கியூபாவிற்கு தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், இது ஒரு நிரந்தரத் தீர்வாகாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அதேசமயம், இந்தச் சம்பவம் பழைய பனிப்போர் காலத்து அரசியல் சூழலை மீண்டும் உலக அரங்கில் நினைவுபடுத்தியுள்ளது.