ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை கைப்பற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், அங்குள்ள எண்ணெய் வளங்களை அமெரிக்கா எடுத்துக்கொள்வதுதான் தனக்கு பிடித்தமான விஷயம் என்றும் கூறியுள்ளார்.

ஈரானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதால் தரைவழித் தாக்குதல் மூலம் கார்க் தீவை எளிதாகக் கைப்பற்றிவிட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இதுவரை வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா, தற்போது தரைவழித் தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.

இதற்காக சுமார் 10,000 சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களை அனுப்ப அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது; ஏற்கனவே 3,500 வீரர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், அமெரிக்கா தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.