தமிழக அரசியலில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இன்று (மார்ச் 30) தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளார்.

தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு, அங்கேயே தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தை அவர் நடத்தினார். இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச் சாடிய விஜய், “தமிழகத்தைச் சீரழித்த தீயசக்தி திமுக” என ஆவேசமாக முழங்கினார்.

“சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டது, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை; 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களை இந்த மோசமான நிலைக்குக் கொண்டு வந்த திமுகவை ஆட்சியை விட்டுத் தூக்கி எறிய வேண்டும்” எனத் தனது பேச்சில் அனலைக் கிளப்பினார். மேலும், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிப்படை பாதுகாப்பைக் கூட மக்களுக்கு வழங்கவில்லை என்றும், வரும் தேர்தலில் மக்கள் தவெக-வின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.