ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிவாயு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. சுமார் 94,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ‘BW TYR’ மற்றும் ‘BW ELM’ ஆகிய இரண்டு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

இதில் ஒரு கப்பல் மார்ச் 31 அன்று மும்பைக்கும், மற்றொரு கப்பல் ஏப்ரல் 1 அன்று மங்களூருக்கும் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே குஜராத்தின் வதினார் முனையத்திற்கு 47,000 மெட்ரிக் டன் எல்பிஜி வந்து சேர்ந்துள்ளதால், நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்க இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியக் கடற்படை போர்க்கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன.

நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் யூரியா உற்பத்திக்குத் தேவையான எரிவாயு கையிருப்பு போதுமான அளவு உள்ளதால், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சர்வதேச சட்டங்களைப் பின்பற்றி, கடல்வழிப் போக்குவரத்து தடையின்றி நடப்பதை உறுதி செய்ய பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் தூதரகங்கள் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருகின்றன.