ஈரான் உடனான மோதல்கள் ஒருபுறம் நீடித்து வரும் நிலையில், ஆசியாவின் மற்றொரு வல்லரசான சீனாவையும் சீண்டும் வகையில் அமெரிக்கா அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைவானுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, வரும் நாட்களில் ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் ஜீன் ஷாஹீன், ஜான் கர்டிஸ், தாம் தில்லிஸ் மற்றும் ஜாக்கி ரோசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தூதுக்குழு ஜப்பான், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்குச் சென்று, அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீனா, தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே கருதி வருகிறது. வெளிநாட்டுத் தலைவர்கள் எவரும் தைவானுக்குப் பயணம் மேற்கொள்வது தங்களது இறையாண்மைக்கு எதிரானது என்பது சீனாவின் நிலைப்பாடு. இத்தகைய சூழலில், அமெரிக்கக் குழுவின் தைவான் பயணம் சீனாவிற்கு விடுக்கப்படும் நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவும் சீனாவும் ஒருபுறம் பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வருகின்றன. மறுபுறம், ட்ரம்ப் சீனா செல்வதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாகவே இத்தகைய ‘சீண்டல்’ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியிருப்பது சீனாவைக் கொதிப்படையச் செய்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பின் போது, இந்தப் பிரச்சினை மிக முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
