அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத் தூதுவராகச் செயல்பட முயன்று வரும் பாகிஸ்தான் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார், பொது இடத்தில் நிலைதடுமாறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக வருகை தந்த வெளிநாட்டு அமைச்சர்களை வரவேற்கச் சென்றபோது, பாகிஸ்தான் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியதையடுத்து, “சமாதானப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் சறுக்கிவிட்டது” எனப் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் சர்வதேச அளவில் ஒரு முக்கிய மத்தியஸ்தராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயலும் வேளையில், அதன் உயர் பதவியில் இருப்பவருக்கு நேர்ந்த இந்தச் சங்கடம் அந்நாட்டு ராஜதந்திர வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமாபாத் தனது நடுநிலையைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படத் துடிக்கிறது. வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு தரப்புடனும் நீண்டகால உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தான், தூதுச் செய்திகளைப் பரிமாறிக்கொள்வது மற்றும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து பிராந்தியப் பதற்றத்தைத் தணிக்கப் பாகிஸ்தான் எடுத்து வரும் இந்த முயற்சி ‘அதிவேகமானது’ என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தானின் இத்தகைய ராஜதந்திர முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இதுவரை நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. ஈரான் இன்னும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளையே ஆதரித்து வருகிறது. இரு நாடுகளையும் ஒரே மேசைக்குக் கொண்டு வருவது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

எப்படியிருப்பினும், ஒரு முஸ்லிம் நாடு என்ற அடிப்படையில் இஸ்லாமாபாத் இந்த இக்கட்டான சூழலில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.