அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றம் தற்போது ஆயுத முனையிலிருந்து ‘பண பலப்பரீட்சைக்கு’ மாறியுள்ளது. உலக நாடுகளின் எரிசக்தி தேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் (Toll) வசூலிக்க ஈரான் திட்டமிட்டு வருவது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச அமைதி உடன்படிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், ஒரு அதிரடியான நிபந்தனையைச் சேர்த்துள்ளது. அதன்படி, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் முழுமையான இறையாண்மையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். மேலும், அந்த வழியாகச் செல்லும் ஒவ்வொரு எண்ணெய் டேங்கர் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கும் ‘சுங்கக் கட்டணம்’ வசூலிக்க ஈரான் அனுமதி கோரியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையாகும். உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதமும், கணிசமான அளவு இயற்கை எரிவாயுவும் (LNG) இந்த குறுகிய பாதை வழியாகவே செல்கின்றன.
இந்தப் பாதையில் ஒரு டேங்கர் கப்பலுக்கு 2 மில்லியன் டாலர் சுங்கக் கட்டணம் விதித்தால் கூட, ஈரானுக்கு மாதம் 800 மில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இது ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தில் 20 சதவீதத்திற்குச் சமமாகும்.
ஈரானின் இந்த கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கடுமையாக நிராகரித்துள்ளார். “ஹார்முஸ் பகுதியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, உலக நாடுகளின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டப்படி, இது ஒரு ‘சர்வதேச கடல்வழிப் பாதை’ என்பதால், எந்த ஒரு தனி நாடும் இங்கு வரி வசூலிக்க முடியாது என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) துபாயில் உள்ள அமெரிக்க வீரர்களை இலக்கு வைத்துத் தாக்கியதாக உரிமை கோரியுள்ளது. ஆனால் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது. இதற்கிடையில் யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஈரானின் இந்த நிபந்தனை ஏற்கப்பட்டால், எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஈரான் வசம் செல்லும். இது வெறும் ஒரு நாட்டின் வருமானம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பையே ஈரானிடம் அடகு வைப்பதற்குச் சமம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
