பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதும், பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவதும் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட சிறையிலேயே இவ்வளவு பெரிய குளறுபடிகளா? எனப் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், கைதிகள் செல்போன்களைத் தாராளமாகப் பயன்படுத்துவதும், தொலைக்காட்சியில் ‘நெட்பிளிக்ஸ்’ (Netflix) உள்ளிட்ட தளங்களில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வரவிருக்கும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டிகள் குறித்து அவர்கள் சகஜமாக விவாதிப்பதும், “இந்த முறை கோப்பை நமதே” எனப் பேசுவதும் பதிவாகியுள்ளது.

கடந்த மார்ச் 27-ஆம் தேதி கொலை வழக்கில் சிறையில் உள்ள கைதிகளால் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறைக்கு வெளியில் உள்ள நபர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

கைதிகள் சிறையில் செல்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சிறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதையெல்லாம் மீறி செல்போன்களைக் கடத்தி வந்துள்ளனர். கழிப்பறைக்கு அருகில் உள்ள நிலத்தடி குழாய்களில் செல்போன்களை மறைத்து வைத்து, சோதனையின்போது சிக்காமல் தப்பித்து வந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதற்குக் கீழ்மட்ட சிறை ஊழியர்களின் ஒத்துழைப்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது‌.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள சிறைத்துறை அதிகாரிகள், டிஜிபி அலோக் குமார் தலைமையில் சிறையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள வீடியோ தொடர்பான செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், இது தொடர்பாக வழக்கு (FIR) பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் 3 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் இத்தகைய சர்ச்சைகள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, சிறைக்குள்ளேயே மது விருந்து நடத்தியது, பழங்களைக் கொண்டு மதுபானம் தயாரித்தது, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனத் தொடர்ச்சியாகப் பல முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், மிகக் கடுமையான குற்றங்களைச் செய்த கைதிகள் தடையின்றி செல்போன்களையும், பொழுதுபோக்கு வசதிகளையும் பயன்படுத்துவது சிறை நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.