மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மாடா தாலுகாவில் உள்ள ரூயி கிராமத்தில், தந்தை ஒருவரே தனது 25 வயது மகனை நள்ளிரவில் அடித்துக் கொன்ற சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. ராஜேந்திர பானுதாஸ் பதங்கே என்பவரின் மகன் விஸ்வஜித் (25).

கடந்த வெள்ளிக்கிழமை விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே போனில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விஸ்வஜித் தனது தந்தையைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே பலமுறை மகன் தன்னைத் தாக்கியதாக ஆத்திரத்தில் இருந்த ராஜேந்திரா, அன்று இரவு ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார். இரவு 11 மணியளவில் விஸ்வஜித் வீட்டில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, மாடுகளைக் கட்டப் பயன்படுத்தப்படும் கனமான இரும்பு கம்பியை எடுத்து வந்த ராஜேந்திரா, மகனின் முகம் மற்றும் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்த கொடூரமான தாக்குதலில் விஸ்வஜித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தனது கணவர் மகனைக் கொல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ராஜஸ்ரீ, உடனடியாகக் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேந்திராவை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு சிறு வாக்குவாதத்திற்காகப் பெத்த மகனையே தந்தை கொன்ற சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.