கேரளாவில் ஓடும் ரயிலில் தனியாக இருந்த பெண்ணை முதியவர் ஒருவர் அநாகரீகமாக வெறித்துப் பார்த்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் காலியான பெட்டியில் பயணம் செய்த அந்தப் பெண், எதிரே அமர்ந்திருந்த நபர் தன்னைத் தொடர்ந்து அசௌகரியமான முறையில் உற்றுப் பார்ப்பதைக் கண்டு அச்சமடைந்துள்ளார்.

இதனால் அந்த நபர் வேண்டுமென்றே அப்பெண்ணை சங்கடத்திற்குள்ளாக்கும் வகையில் நடந்து கொண்டதை அந்தப் பெண் தனது அலைபேசியில் படம்பிடித்து ‘இதுதான் யதார்த்தம்’ என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் குறித்துப் பலரும் தங்களது கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலில் ஒரு பெண் எதிர்கொள்ளும் மன ரீதியான துன்புறுத்தலை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது போன்ற அநாகரீகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.