சென்னை பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் மிகவும் ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளார்.
“பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது எனக்குத் தெரியாது, ஆனால் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தேர்தல் ஆணையம் யாருக்கும் எதற்கும் மறுப்பு தெரிவிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பும், அனுமதியும் கொடுத்தே தீர வேண்டும்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சீமான், ஒருவேளை இப்படித் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டால், “அப்புறம் என்ன ஜனநாயகம், என்ன மக்களாட்சி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் சம உரிமை உண்டு என்பது வெறும் வெற்றுப் பேச்சாகிவிடும் என்றும், அதிகார வர்க்கத்தின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தவெக-வின் பிரச்சாரத் தடை விவகாரத்தில் சீமானின் இந்த அதிரடி ஆதரவுப் பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், தேர்தல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
