ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு தகவல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது ‘சீரியஸ்’ தன்மையை வெளிப்படுத்தும் விதமாக, ஈரான் 10 எண்ணெய் கப்பல்களை அமெரிக்காவிற்குப் ‘பரிசாக’ அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்கப்பட்ட இந்த 10 மெகா எண்ணெய் கப்பல்களிலும், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகப் பாகிஸ்தான் நாட்டு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன என டிரம்ப் ஒரு ரகசிய உடைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரானியர்கள் ஒரு உடன்படிக்கைக்காகத் தற்போது தன்னிடம் மண்டியிட்டுக் கெஞ்சுவதாகவும், அவர்கள் முற்றிலும் பலவீனமடைந்துவிட்டதாகவும் டிரம்ப் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

முதலில் 8 எண்ணெய் கப்பல்களை அனுப்பிய ஈரான், பின்னர் தனது நம்பிக்கையைப் பெறுவதற்காக மேலும் 2 கப்பல்களைப் பரிசாக வழங்கியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். “ஈரானியர்கள் வெளியே யாரிடமும் பேசமாட்டோம் என்று கூறினாலும், திரைமறைவில் அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்காகத் தீவிரமாகப் போராடி வருகிறார்கள்.

அவர்கள் பேச்சுவார்த்தையில் மிகவும் கைதேர்ந்தவர்கள், ஆனால் இப்போதுள்ள சூழலில் அவர்களுக்கு வேறு வழியில்லை” என டிரம்ப் விமர்சித்துள்ளார். ஈரானின் இந்தத் திடீர் ‘நல்லெண்ண சைகை’ (Goodwill Gesture), இரு நாடுகளுக்கும் இடையே ரகசியமான ஆனால் பலமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

போரை நிறுத்த ஈரான் விதித்துள்ள 5 நிபந்தனைகளுக்குப் பதிலடியாக, டிரம்ப் தனது பாணியில் ஈரானை பணிய வைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.