சென்னை தாம்பரம் அருகே தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றும் 28 வயது பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் மேடவாக்கத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணுடன் ஹரி கிருஷ்ணன் நட்பாகப் பழகி வந்துள்ளார்.
ஒருமுறை இருவரும் காரில் பேசிக்கொண்டிருந்தபோது, ஹரி கிருஷ்ணன் அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவருடான தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். ஆனால், காரில் இருவரும் தனியாக இருந்ததை வீடியோ எடுத்துள்ளதாகக் கூறி, அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என ஹரி கிருஷ்ணன் மிரட்டியுள்ளார்.
இதற்கிடையில், அந்தப் பெண் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்ததை அறிந்த ஹரி கிருஷ்ணன் ஆத்திரமடைந்தார். அந்தப் பெண்ணின் வீட்டுக்கே சென்று தகராறு செய்ததோடு, அவரைத் தாக்கி கொலை செய்யவும் முயன்றுள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரி கிருஷ்ணனைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
