இன்றைய நவீன காலத்தில் அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தவும், சாப்பாடு ஊட்டவும் பல பெற்றோர்கள் மொபைல் போன் அல்லது டிவியில் வீடியோக்களைப் போட்டுக் கொடுப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளனர்.
ஆனால், இது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு “அமைதியான கொள்ளைநோய்” என பெங்களூரு மதர்ஹுட் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் கிருஷ்ண பிரசாத் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மற்றவர்களுடன் பேசிப் பழகுவது மிக அவசியம். ஆனால், திரையில் ஓடும் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே இருப்பதால், அவர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் குறைந்து, பேச்சுத் தாமதம் (Speech Delay) ஏற்படுகிறது.
ஒரு வயது குழந்தைக்குத் தன் பெயர் சொன்னால் தெரிய வேண்டும், இரண்டு வயதில் எளிய வார்த்தைகளைப் பேச வேண்டும். ஆனால், அதிக நேர செல்போன் பயன்பாட்டால் குழந்தைகள் கண் பார்த்துப் பேச மறுப்பது, சைகையிலேயே காட்டுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
எனவே, இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் போன் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு குழந்தைகளுடன் அதிக நேரம் பேச வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
