கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், பாடம் நடத்த வேண்டிய பேராசிரியரே மாணவியிடம் காதல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தட்டிக் கேட்ட மாணவி, அந்த பேராசிரியரை சக மாணவர்கள் முன்னிலையிலேயே செருப்பால் அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் நபர் ஒருவர், வகுப்பறையிலேயே ஒரு மாணவியிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். “வேலியே பயிரை மேய்ந்த கதையாக”, கல்வி கற்கும் இடத்தில் ஆசிரியர் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டது அங்கிருந்த மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.



பேராசிரியரின் இந்தச் செயலுக்கு அந்த மாணவி உடனடியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அந்த ஆசிரியர், “நீதான் என்னிடம் முதலில் காதலை வெளிப்படுத்தினாய்” என்று கூறி தப்பிக்க முயன்றதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, மற்ற மாணவர்கள் முன்னிலையிலேயே தனது செருப்பை எடுத்து அந்த ஆசிரியரை சரமாரியாக அடித்துத் தாக்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து கல்லூரி நிர்வாகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆசிரியரின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் குறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.