இந்தியாவில் மொழி குறித்த விவாதங்கள் ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருந்தாலும், சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில் மொழியைக் கடந்து அன்பு மட்டுமே பிரதானமாக இருப்பதை விளக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது வட இந்தியாவிலிருந்து ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்த ஒரு பெண், அங்குள்ள தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணிடம் தெலுங்கு மொழியில் பேச முயற்சிக்கும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளன. “தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த பிறகு எனது அன்றாட உரையாடல்கள் இப்படித்தான் இருக்கின்றன” என்ற வாசகத்துடன் அந்தப் பெண் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவருக்கு தெலுங்கு சரியாகத் தெரியாவிட்டாலும், சைகை மற்றும் உடைந்த சொற்கள் மூலம் எப்படியாவது புரிய வைக்க அவர் எடுக்கும் முயற்சி சிரிப்பையும் அதே சமயம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அந்தப் பெண்ணின் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். “நீங்கள் தெலுங்கு பேசும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது, உங்களை ஏற்கனவே நாங்கள் தத்தெடுத்துக் கொண்டோம்” என்று தெலுங்கு மக்கள் அன்பைப் பொழிந்து வருகின்றனர். மற்றொரு பஞ்சாபி பெண், “நானும் பஞ்சாபிதான், தெலுங்கு கற்றுக்கொள்வது எளிது, முயற்சி செய்யுங்கள்” என ஊக்கமளித்துள்ளார்.
View this post on Instagram
இதேபோன்ற ஒரு அனுபவத்தைப் பகிர்ந்த மற்றொரு பயனர், “பெங்களூருவில் நான் வேலைக்காரப் பாட்டியிடம் வெள்ளரிக்காய் சாலட் (Salad) செய்யச் சொன்னேன், ஆனால் மொழி புரியாததால் அவர் வெள்ளரிக்காய் கூட்டு செய்து வைத்தார். ஆனாலும் மக்கள் காட்டும் அன்பு பெரியது” எனப் பதிவிட்டுள்ளார்.
