இன்றைய காலகட்டத்தில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக, நடுத்தரக் குடும்பங்களின் சமையலறையில் ‘இண்டக்ஷன்’ (Induction Stove) அடுப்புகள் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன. டீ போடுவது முதல் அவசரத்திற்கு சமையல் செய்வது வரை இது ஒரு ‘சூப்பர் ஹீரோ’ போல செயல்படுகிறது. ஆனால், திடீரென இதில் ‘E0’ அல்லது ‘E6’ போன்ற எர்ரர் (Error) குறியீடுகள் தோன்றி அடுப்பு வேலை செய்யாமல் நின்றுவிடுவதை நாம் பார்த்திருப்போம்.

இது நிறுவனத்தின் குறைபாடு என்று நாம் நினைத்தாலும், உண்மையில் நமது தவறான பயன்பாடே இதற்கு முக்கியக் காரணம் என்கின்றனர் பழுது நீக்கும் நிபுணர்கள். இண்டக்ஷன் அடுப்பை நீண்ட காலம் உழைக்க வைக்க சில முக்கிய ஆலோசனைகள் இதோ,

 

 

View this post on Instagram

 

A post shared by ElectricFault.in (@electricfault.in)

1. சரியான பாத்திரங்களைத் தேர்ந்தெடுங்கள்:

இண்டக்ஷன் அடுப்புகள் மின்காந்த அலைகள் (Electromagnetic field) மூலம் இயங்குகின்றன. அதன் அடிப்பகுதி (Base) முற்றிலும் சமதளமாக இருக்க வேண்டும். இரும்பு அல்லது துருப்பிடிக்காத எஃகு (Steel) பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடிப்பகுதி வளைந்திருந்தாலோ அல்லது சிறியதாக இருந்தாலோ சென்சார்கள் பாதிக்கப்பட்டு, உள் இருக்கும் காயில் (Coil) அதிக வெப்பமடைந்து பழுதாகும்.

2. நான்-ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு:

இண்டக்ஷன் அடுப்பிற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘பெரோமேக்னடிக்’ (Ferromagnetic) வசதி கொண்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. இது வெப்பத்தை சீராகப் பரவச் செய்வதோடு, மின்சாரத்தையும் சேமிக்கும். சாதாரண அலுமினிய பாத்திரங்கள் இதில் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்க.

3. அதிக வெப்பத்தைத் தவிர்க்கவும்:

அனைத்து உணவுகளையும் ‘ஹை பவர்’ (High Power) செட்டிங்கில் வைத்து சமைப்பதைத் தவிர்க்கவும். தொடர்ந்து அதிக வெப்பத்தில் பயன்படுத்தும்போது, அதன் உள்ளே இருக்கும் ‘IGBT ட்ரான்சிஸ்டர்’ மற்றும் காயில்கள் உருகிவிடும். 99 சதவீத அடுப்புகள் பழுதாக இதுவே முக்கியக் காரணமாகிறது.

4. வோல்டேஜ் மற்றும் மின் பாதுகாப்பு:

திடீர் மின் அழுத்த மாறுபாடுகள் (High/Low Voltage) இண்டக்ஷன் அடுப்பின் மெயின் சர்க்யூட்டைப் பாதிக்கும். எனவே, தரமான ஸ்டெபிலைசர் அல்லது சாக்கெட்டுகளைப் பயன்படுத்தவும். இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் அடுப்பை ‘அன்பிளக்’ (Unplug) செய்வது பாதுகாப்பானது.

5. காற்றோட்டம் மற்றும் தூசுப் பராமரிப்பு:

அடுப்பின் உட்புற வெப்பத்தை வெளியேற்ற அதன் அடியில் ஒரு சிறிய மின்விசிறி (Fan) இருக்கும். அடுப்பை துணி அல்லது பேப்பர் மீது வைத்துப் பயன்படுத்தக் கூடாது; இது காற்றோட்டத்தைத் தடுத்து மதர்போர்டை (Motherboard) பாதிக்கும். மாதத்திற்கு ஒருமுறை உலர்ந்த துணி அல்லது பிரஷ் கொண்டு காற்றோட்டத் துவாரங்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

6. ஈரமான கைகளால் தொடாதீர்கள்:

தொடுதிரை (Touch panel) பகுதி மிகவும் நுட்பமானது. ஈரமான கைகளால் பொத்தான்களை அழுத்துவதோ, சமைக்கும்போது பொங்கி வழியும் பால் அல்லது உணவை உடனே துடைக்காமல் விடுவதோ ஷார்ட் சர்க்யூட்டிற்கு வழிவகுக்கும்.

முக்கியக் குறிப்பு:

சமைத்து முடித்தவுடன் சுவிட்சை உடனே அணைத்துவிடக் கூடாது. அடுப்பின் உள்ளே இருக்கும் மின்விசிறி தானாக நின்று, இயந்திரம் குளிர்ச்சியடையும் வரை காத்திருந்து பின் பிளக்கை அகற்ற வேண்டும். இத்தகைய சிறிய மாற்றங்கள் உங்கள் இண்டக்ஷன் அடுப்பின் ஆயுளைப் பல ஆண்டுகள் நீட்டிக்கும்.