கர்நாடகாவின் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கை நினைவுபடுத்தும் வகையில், கோவாவில் 25-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில் பாஜக பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கோவா குர்சோரெம் நகராட்சி பாஜக கவுன்சிலரின் மகனான சோஹம் சுஷாந்த் நாயக் (20) என்பவர் மீது இந்தப் புகார் எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக சோஹம் நாயக், அப்பகுதியைச் சேர்ந்த 25 முதல் 30 பள்ளி மாணவிகளுடன் பாலியல் ரீதியாக பழகி, அந்த அத்துமீறல்களைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நண்பர்களுடன் மது அருந்தும் போது, தன்னிடம் இருந்த ஆபாச வீடியோக்களை சோஹம் பெருமையுடன் காட்டியுள்ளார். இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை இரவு குட்சாட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பந்த் நடத்தப்படும் என எச்சரித்ததை அடுத்து, திங்கள்கிழமை அதிகாலை சோஹம் நாயக் கைது செய்யப்பட்டார்.

குர்சோரெம் காவல்துறையினர் சோஹம் நாயக் மீது போக்சோ (POCSO) சட்டம் மற்றும் கோவா குழந்தைகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து தெற்கு கோவா எஸ்பி சந்தோஷ் தேசாய் கூறுகையில், “தற்போது முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு 4 நாட்கள் போலீஸ் காவலை நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் அடையாளத்தை ரகசியமாக வைத்து வாக்குமூலம் பெற்று வருகிறோம். டிஜிட்டல் ஆதாரங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்படும்,” என்றார்.

இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிக்கு அரசியல் பின்னணி இருப்பதால் விசாரணை பாதிக்கப்படக்கூடாது என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. மேலும் இதேபோன்று கடந்த 2024-ல் கர்நாடகாவின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே பாணியில், தற்போது கோவாவிலும் வீடியோக்களைப் பயன்படுத்தி மாணவிகளை மிரட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.