கேரளா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி தொகுதியில் இடதுசாரி முன்னணி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பினராயி விஜயன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த வாக்காளர் ஒருவர் திடீரென எழுந்து முதல்வரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார். இதனால் கடும் கோபமடைந்த பினராயி விஜயன், “கேள்வி கேட்பதை வீட்டோடு வைத்துக்கொள்” என்று மேடையிலேயே ஆவேசமாக பதிலளித்தார்.
மேலும் முதல்வரின் இந்த திடீர் கோபமான பதிலைக் கேட்டு மேடையில் இருந்த நிர்வாகிகளும், அங்கிருந்த தொண்டர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது உரையைத் தொடர்ந்த பினராயி விஜயன் அரசின் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இந்நிலையில் கேரளா தேர்தலையொட்டி ஆளும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், பிரசார மேடையில் நடந்த இந்த மோதல் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எனினும், எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தை விமர்சித்து வரும் நிலையில், தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
