காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்பது தொண்டர்களுக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்காக இன்று (மார்ச் 25) கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் பிரசாரம் செய்யவிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்க இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேரளா சென்று பிரசாரத்தை முன்னெடுப்பார் என்று கூறப்படுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், சோனியா காந்தியின் உடல்நிலை குறித்த செய்தி காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
