2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தனி அணியாகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தற்போது தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்து அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.
திமுகவிடம் இரண்டு தொகுதிகள் எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்க முன்வந்ததால் அதிருப்தி அடைந்த வேல்முருகன், கூட்டணியிலிருந்து அதிரடியாக விலகினார். “தன்னுடன் இருக்கும் சில அமைப்புகளை வைத்து தனி அணியாகக் களம் காண்போம்” எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது இந்த திடீர் விலகல் அறிவிப்பு அக்கட்சியின் தொண்டர்களைப் பெரும் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
”இடங்களை விட எங்களின் 10 கோரிக்கைகளே முக்கியம்” எனத் தன்மானத்துடன் கூட்டணியிலிருந்து வெளியேறிய வேல்முருகன், ஏன் திடீரெனத் தேர்தலில் இருந்தே விலகும் முடிவை எடுத்தார் என்பது தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. இது ஒரு தற்காலிக அமைதியா அல்லது தேர்தல் களத்தையே மாற்றப்போகும் புதிய வியூகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
