கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் மகன் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் பைல்ஹொங்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பாபுராவ் பொலஷெட்டியின் மகன் ராஜு பொலஷெட்டி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் தார்வாட் தாலுகாவிற்கு உட்பட்ட ராமபூர் கிராமத்தின் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே சென்ற ரயில் தண்டவாளம் அருகே, கார் ஒன்று தீப்பிடித்து எரிவதை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காருக்குள் உடல் முற்றிலும் கருகிய நிலையில் இருந்த ராஜுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்த விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜு பொலஷெட்டி கடத்தப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் ஆதாரங்களை அழிப்பதற்காக அவர் உடலோடு காரை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தியிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் தார்வாட் ரூரல் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் கூடுதல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் பிரமுகரின் மகன் இத்தகைய கோரமான முறையில் உயிரிழந்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.