ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் போர் தொடங்குவதற்குக் காரணமான ‘பழியை’ தனது பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமத்தியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டென்னசி மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய டிரம்ப், “ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது, எனவே அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று முதலில் குரல் கொடுத்ததே பீட் தான்” எனக் கூறி அதிர வைத்துள்ளார்.
போர் தொடங்கிய விதம் குறித்து டிரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே ஆளுக்கு ஒரு காரணத்தைக் கூறி வரும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாகப் பழியைத் தன் கீழ் உள்ள அதிகாரி மீதே டிரம்ப் திருப்பியிருப்பது, வெள்ளை மாளிகைக்குள் நிலவும் குழப்பத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தப் போரில் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், போருக்கான காலக்கெடுவை மேலும் 5 நாட்களுக்கு டிரம்ப் நீட்டித்துள்ளார். “ஒப்பந்தத்திற்கு ஈரான் சம்மதித்தால் சுமுகமாகத் தீர்ப்போம், இல்லையென்றால் தொடர்ந்து குண்டு வீசுவோம்” என அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக அமெரிக்கா கூறினாலும், அதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் அழுத்தம் ஒருபுறம், நிர்வாகத்திற்குள் நிலவும் பிளவு மறுபுறம் எனச் சிக்கியுள்ள டிரம்ப், தற்போது போர் குறித்த வரலாற்றைத் தனக்குச் சாதகமாக மாற்றி எழுத முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர்.
