தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. இதற்காகத் தமிழகம் வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது. இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இருபத்தி ஏழு தொகுதிகளும் பாமகவுக்கு 18 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்ற சிறிய கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து இன்று இரவுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமாகா தலைவர் ஜி கே வாசன் தமக்கு ஆறு தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுக நான்கு இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ஜி கே வாசன் இன்றைய தொகுதிப் பங்கீடு நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை வழங்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவி இந்த முறை வழங்கப்படாததும் அவரது அதிருப்திக்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
