சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவினரின் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் தவெக தலைவர் விஜய், அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று பரப்பப்பட்ட செய்திகள் பொய்யானவை என்று குறிப்பிட்ட அவர், தங்களது கட்சி தனித்துச் செயல்படுவதை சகித்துக் கொள்ள முடியாமல், கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தை வெறும் “ஷூட்டிங்” என்று அதிமுகவினர் கொச்சைப்படுத்தி வருவதாகச் சாடினார். இத்தகைய தரம் தாழ்ந்த பிரசாரங்கள் அவர்களின் அரசியல் விரக்தியையே காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார்.

மேலும், விஜயைத் தங்களது பக்கம் இழுக்க பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் முயன்றதாகத் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, மதச்சார்பற்ற கொள்கைகளில் விஜய் உறுதியாக இருந்ததால்தான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் வாய்ப்பை அவர் நிராகரித்ததாகக் கூறினார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் திட்டமிட்டு தவெக மீது அவதூறுகளைப் பரப்புவதாகவும், மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து விஜய் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.