ஹாங்காங்கில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்த நிலையில், விமானத்தை மீண்டும் ஹாங்காங்கிற்குத் திருப்புவதற்குப் பதிலாக லண்டன் நோக்கித் தொடர விமானிகள் முடிவெடுத்தனர்.

இதன் காரணமாக, விமானத்தில் இருந்த மற்ற 331 பயணிகளும் அந்தப் பெண்ணின் உடலுடன் சுமார் 13 மணி நேரம் பயணிக்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. உயிரிழந்த பெண்ணின் உடலைத் துணியால் சுற்றி விமானத்தின் பின்பகுதியில் உள்ள ஒரு அறையில் பணியாளர்கள் வைத்திருந்தனர்.

மேலும் விமானம் நீண்ட நேரம் வானில் பறந்து கொண்டிருந்ததால், அந்தப் பெண்ணின் உடலில் இருந்து வெளியேறிய துர்நாற்றம் விமானம் முழுவதும் பரவி பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரை இறங்கியதும், சுமார் 45 நிமிடங்கள் பயணிகள் கீழே இறங்க அனுமதிக்கப்படாமல் விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து விளக்கமளித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இத்தகைய சூழல்களில் பின்பற்ற வேண்டிய அனைத்து முறையான பாதுகாப்பு நடைமுறைகளும் சரியாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்ததுடன், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.