சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று தேர்தல் சிறப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், பெங்களூருவிலிருந்து சென்னை வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பண புழக்கம் மற்றும் சட்டவிரோத கடத்தல்களைக் கண்காணிக்க ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை லால்பாக் எக்ஸ்பிரஸில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணிகளைக் கண்காணித்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்களிடம் இருந்த பைகளில் ஏராளமான தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அந்த நகைகளுக்குத் தேவையான எந்தவித பில்களோ அல்லது சட்டப்பூர்வ ஆவணங்களோ அவர்களிடம் இல்லாததால், அதிகாரிகள் உடனடியாக நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து நகையைக் கடத்தி வந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.