ஒரு நாட்டின் வெற்றியைத் தீர்மானிப்பது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் மனமகிழ்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் இருபதாம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் வலையமைப்பு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து உலக மகிழ்ச்சி அறிக்கை இரண்டாயிரத்து இருபத்தி ஆறினை வெளியிட்டுள்ளன. சமூக ஆதரவு, ஊழலற்ற நிர்வாகம், தனிநபர் சுதந்திரம் மற்றும் தரமான வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மொத்தம் நூற்று நாற்பத்தேழு நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அந்த நாடு முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பின்லாந்தைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, டென்மார்க், கோஸ்டாரிகா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
நார்வே, நெதர்லாந்து, இஸ்ரேல், லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளன. இந்தப் பட்டியலில் போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சியரா லியோன், மலாவி மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலின் இறுதிப் பகுதியில் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் உலக மகிழ்ச்சிப் பட்டியலில் நூற்றுப் பதினாறாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நூற்றுப் பதினெட்டாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் அண்டை நாடுகளான நேபாளம் தொண்ணூற்று ஒன்பதாவது இடத்திலும், பாகிஸ்தான் நூற்று நான்காவது இடத்திலும் உள்ளன.
வங்காளதேசம் நூற்று இருபத்தி ஏழாவது இடத்திலும், இலங்கை நூற்று முப்பத்தி நான்காவது இடத்திலும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்து வந்தாலும், உலக அளவிலான மகிழ்ச்சிப் பட்டியலில் இந்தியா இன்னும் பின்தங்கியே இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆபத்து காலங்களில் உதவிக்கு ஆட்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே குறைவாக இருப்பதே இந்த பின்னடைவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நாட்டின் வருமானம் ஒரு சிலரிடமே குவிந்து கிடப்பதும், பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு கிடைப்பதில் உள்ள சிரமங்களும் மகிழ்ச்சி விகிதத்தைக் குறைக்கின்றன.
தரமான மருத்துவ வசதிகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்காததும், இளைஞர்களிடையே நிலவும் வேலையின்மை மற்றும் எதிர்காலம் குறித்த அச்சமும் வாழ்க்கை திருப்தியைப் பாதிக்கின்றன. இந்தச் சவால்களைக் களைந்து மக்களின் நல்வாழ்வில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே வரும் ஆண்டுகளில் இந்தியா இந்தப் பட்டியலில் முன்னேற முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
