நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’ வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடிக்கின்றன. கடந்த ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாக வரவேண்டிய இப்படம், தணிக்கைக்குழு சான்றிதழ் அளிக்க மறுத்ததால் நீதிமன்றம் வரை சென்றது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் ஆய்விற்கும் இப்படம் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் முடிவதற்குள் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மற்றொருபுறம், இப்படத்தில் இடம்பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் அட்லீ போன்ற இயக்குநர்கள் பத்திரிகையாளர்களாக நடித்துள்ள காட்சிகளில் உள்ள சில அரசியல் வசனங்கள் ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக விஜய்யை நோக்கி அவர்கள் கேட்கும் அரசியல் ரீதியான கேள்விகள் தணிக்கைக்குழுவின் மறுஆய்வில் நீக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இத்தகைய அடுத்தடுத்த தடைகளால் ‘ஜனநாயகன்’ எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.