மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல், தற்போது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தையும் தாண்டி, உலக நாடுகளின் ‘டிஜிட்டல்’ முதுகெலும்பாக விளங்கும் கடலடி இணையக் கேபிள்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால், ஹார்முஸ் ஜலசந்தி  வழியாகச் செல்லும் இணையக் கேபிள்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த கேபிள்கள் பாதிக்கப்பட்டால், வெறும் இணையம் மட்டுமல்லாது சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பேமெண்ட்கள், ஆன்லைன் அலுவலகப் பணிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகள் என அனைத்தும் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது.

தற்போதைய சூழலில் இரண்டு இடங்கள் மிக முக்கியமான இலக்குகளாகக் கருதப்படுகின்றன: அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி: ஈரானின் ஆதிக்கத்தில் உள்ள இப்பகுதியில் கடலுக்கு அடியில் சுரங்கங்கள் அல்லது வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாப் அல்-மண்டேப் ஜலசந்தி: செங்கடல் பகுதியில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு பகுதிகளின் வழியாகத்தான் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கிய ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் செல்கின்றன. குறிப்பாகச் செங்கடல் பகுதியில் மட்டும் 17 முக்கிய கேபிள்கள் உள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக AEAE-1, பால்கன் (Falcon), கல்ஃப் பிரிட்ஜ் இன்டர்நேஷனல் மற்றும் டாடா டிஜிஎன் கல்ஃப் ஆகிய முக்கிய கேபிள்கள் செல்கின்றன. இவைதான் இந்தியாவின் சர்வதேச இணைய இணைப்பை வலுப்படுத்துகின்றன. ஹார்முஸ் பகுதியின் ஆழம் வெறும் 200 அடி மட்டுமே என்பதால், மிக எளிதாக இந்த கேபிள்களைத் தாக்கி அழிக்க முடியும் என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற பெரும் நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் அமைத்துள்ள பிரம்மாண்ட தரவு மையங்கள் (Data Centers) இந்த கேபிள்களையே சார்ந்துள்ளன. மேலும்  இந்தத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால், உலகளாவிய பொருளாதாரத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.