திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சோனியா, அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும், உடன் பணியாற்றிய கோகுல கண்ணன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த சில வாரங்களாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சோனியா வலியுறுத்திய நிலையில், கோகுல கண்ணன் அவரைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மனவேதனையடைந்த சோனியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோனியாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவரது அறையில் ஒரு கடிதம் சிக்கியது.
அதில், கோகுல கண்ணன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதே தனது முடிவுக்குக் காரணம் என்று சோனியா குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக கோகுல கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
