சேலம் அருகே அரியானூர் பகுதியில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ மீது மோதியதில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை வந்துகொண்டிருந்தது. சேலம் மாநகரை ஒட்டியுள்ள அரியானூர் அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய அந்தப் பேருந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் டெம்போவில் இருந்தவர்கள் என மொத்தம் 4 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தின் தாக்கத்தால் பேருந்தின் முன்பகுதி மற்றும் மற்ற வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

விபத்து குறித்து தகவலறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பேருந்தின் பிரேக் பழுதானதா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.