ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரும், ‘டெத் ஓவர்’ ஸ்பெஷலிஸ்டுமான ஆஸ்திரேலிய வீரர் நேதன் எல்லிஸ் (Nathan Ellis), தசைப்பிடிப்பு (Hamstring Injury) காரணமாக ஒட்டுமொத்தத் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். கடந்த சீசனில் மோசமான நிலையில் இருந்த சிஎஸ்கே-வை மீட்டெடுக்க எல்லிஸ் ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தச் செய்தி ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், “எல்லிஸின் விலகல் எங்களுக்குப் பெரிய இழப்பு. குறிப்பாகக் கடைசி ஓவர்களில் அவர் வீசும் பந்துகள் அணிக்கு மிக அவசியம். தற்போது அவருக்கான மாற்றுக் குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். மேட் ஹென்றி (Matt Henry) போன்ற வீரர்கள் அணியில் இருந்தாலும், எல்லிஸுக்குப் பதிலாக ஜெரால்ட் கோட்ஸி (Gerald Coetzee) அல்லது ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் (Jason Behrendorff) போன்ற வீரர்களை ஒப்பந்தம் செய்ய சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. சஞ்சு சாம்சன் வருகை, ஜடேஜா-சாம் கர்ரன் மாற்றம் எனப் பல அதிரடிகளுக்கு மத்தியில் எல்லிஸின் காயம் சிஎஸ்கே-வின் திட்டங்களைச் சற்று ஆட்டிப்பார்த்துள்ளது.
