ஐபிஎல் 19-ஆவது சீசன் தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சை இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி எவ்வித பயமும் இன்றி எதிர்கொள்கிறார். ஜடேஜா வீசிய 6 பந்துகளில், 5 பந்துகளை வைபவ் வானவேடிக்கையாக சிக்ஸருக்குப் பறக்கவிட்டு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சீசனின் மிகப்பெரிய மாற்றமாக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். ஐபிஎல் முதல் சீசனில் (2008) ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவர், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான ஒரு பெரிய ‘டிரேட்’ (Trade) மூலம் மீண்டும் ராயல்ஸ் குடும்பத்தில் இணைந்துள்ளார். ஜடேஜா மற்றும் சாம் கரன் ராஜஸ்தான் அணிக்கு வர, கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
🗡️🆚🥶 pic.twitter.com/02GTC3hCcr
— Rajasthan Royals (@rajasthanroyals) March 19, 2026
தனது அறிமுக சீசனிலேயே 206.55 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 252 ரன்களை விளாசி அனைவரையும் கவர்ந்தவர் வைபவ் சூரியவன்ஷி. இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். இவரது அதிரடி ஆட்டம் இந்த ஆண்டும் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 30-ஆம் தேதி குவஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து ஏப்ரல் 4-இல் குஜராத் டைட்டன்ஸ் உடனும், ஏப்ரல் 7-இல் மும்பை இந்தியன்ஸ் உடனும் மோதுகிறது. தற்போது ரியான் பராக் தலைமையில் ஜடேஜா, சாம் கரன், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் ராஜஸ்தான் அணி வலுவாகக் காணப்படுகிறது.
