ஐபிஎல் 19-ஆவது சீசன் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தனது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் உடற்தகுதி குறித்து எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமைக்குரியவர் 35 வயதான சஹால். இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ள அவர், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் உடனான கலந்துரையாடலின் போது ஒரு ரகசியத்தை உடைத்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தான் மது அருந்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு இப்போது 35 வயதாகிறது. களத்தில் இன்னும் சுறுசுறுப்பாக இயங்கவும், எனது அணிக்கு 150 சதவீத பங்களிப்பை வழங்கவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். அணியில் உள்ள இளம் வீரர்கள் ஒரு சீனியர் வீரராக என்னிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்” என சஹால் நெகிழ்ச்சியுடன் கூறினார். இதைக் கேட்ட டி வில்லியர்ஸ், சஹாலின் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் நழுவவிட்டது. அந்தப் போட்டியில் மார்கோ யான்சன் இல்லாதது அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததாகக் குறிப்பிட்ட சஹால், இந்த முறை யான்சனின் வருகை அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிற்குப் பெரும் பலம் சேர்க்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தங்களது அணிகளுடன் இணைந்து பயிற்சிகளைத் தொடங்கியுள்ள நிலையில், சஹாலின் இந்த ‘டிசிப்ளின்’ முடிவு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த முறை கோப்பையைப் பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
