கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் இடையே களத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஒற்றுமைகள் நீடிக்கின்றன. ரஞ்சி அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசியது முதல், தற்போது பேட்டின் எடை வரை அர்ஜுன் தனது தந்தையின் பாணியையே பின்பற்றி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்காக ₹30 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள 26 வயதான அர்ஜுன் டெண்டுல்கர், தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் திருமணமான கையோடு, அடுத்த நாளே யுவராஜ் சிங்கிடம் தீவிரப் பயிற்சி பெறச் சென்ற அர்ஜுனின் அர்ப்பணிப்பை லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் வெகுவாகப் பாராட்டினார்.
Already loving this new Rishabh-Arjun bond 🥹❤️💙 pic.twitter.com/pa79YqebbU
— Lucknow Super Giants (@LucknowIPL) March 18, 2026
பயிற்சி முகாமின் போது அர்ஜுன் பயன்படுத்தும் பேட்டின் எடையைக் கேட்டு ரிஷப் பந்த் ஆச்சரியத்தில் உறைந்து போனார். அர்ஜுன் பயன்படுத்தும் பேட்டின் எடை 1220 கிராம் ஆகும். இது ரிஷப் பந்த் பயன்படுத்துவதை விட சுமார் 500 கிராம் அதிகமாகும். “இவ்வளவு கனமான பேட்டில் விளையாடுவதால் என்ன லாபம்?” என பந்த் கேட்க, அதற்கு அர்ஜுன், “எனது தந்தை 1310 முதல் 1315 கிராம் எடையுள்ள பேட்டில் விளையாடுவார். நான் 1200 கிராமுக்குக் குறைவாக ஒருபோதும் சென்றதில்லை. கனமான பேட் என்றால் பந்து லேசாகப் பட்டாலே சிக்ஸருக்குப் பறக்கும்,” என்று பதிலளித்துள்ளார்.
தனது சுயசரிதையான ‘பிளேயிங் இட் மை வே’ (Playing It My Way) புத்தகத்தில், சச்சின் தனது பேட் எடையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 11 வயதிலிருந்தே தனது சகோதரர் அஜித்தின் கனமான பேட்டைப் பயன்படுத்திப் பழகியதால், லேசான பேட்கள் அவருக்கு ஒருபோதும் வசதியாக இருந்ததில்லை. “பேட்டின் எடையே எனது ஸ்விங்கிற்கு (Swing) சக்தியைத் தருகிறது. அது எனது கையின் நீட்சியாகவே மாறிவிட்டது,” என சச்சின் குறிப்பிட்டிருந்தார். மேலும் தந்தையைப் போலவே அர்ஜுனும் அதே ‘பவர்ஃபுல்’ பாணியைக் கையில் எடுத்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
