உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சீனா தற்போது அந்த இடத்தை இந்தியாவிடம் இழந்து பெரும் மக்கள் தொகை சரிவைச் சந்தித்து வருகிறது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால் மூன்றாவது ஆண்டாக அந்நாட்டு மக்கள் தொகை சரிவை நோக்கிச் சென்றுள்ளது.
தற்போது சீனாவின் மக்கள் தொகை சுமார் 141 கோடியாக உள்ள நிலையில் கடுமையான குழந்தை கட்டுப்பாட்டுக் கொள்கைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வரும் 2054ம் ஆண்டிற்குள் மக்கள் தொகை இன்னும் வெகுவாகக் குறையக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இந்த மக்கள் தொகை வீழ்ச்சி சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்தச் சூழலைச் சமாளிக்கவும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இளைஞர்களை ஊக்குவிக்கவும் சீனாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் வினோதமான முடிவுகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள விமானப் போக்குவரத்துத் தொழிற்கல்லூரி ஒன்று தனது மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் ஆறாம் தேதி வரை வசந்த கால விடுமுறை அளித்துள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் மாணவர்கள் இயற்கை அழகை ரசிப்பதுடன் மலர்களைக் கண்டு காதலை அனுபவிக்க வேண்டும் என்று அந்தப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தற்போது உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
