மேற்காசியாவில் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றமான உறவு காரணமாக அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் இன்னும் நீடிப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. அமெரிக்க செனட் சபையில் கடந்த புதன்கிழமை (மார்ச் 18, 2026) சமர்ப்பிக்கப்பட்ட ‘அமெரிக்க உளவுத்துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு’ அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 34 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வெளிவந்துள்ளது.

அதாவது  இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடிப் போரைத் தவிர்க்க விரும்பினாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு அணு ஆயுதப் போர் வெடிக்கும் அபாயத்தை எப்போதும் ஒரு கத்திமுனையில் வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்கள், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு பெரிய அளவிலான ராணுவ மோதலைத் தூண்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டால் சமீபத்திய அணு ஆயுதப் பதற்றங்கள் சற்று குறைந்திருந்தாலும், பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் ஒரு நெருக்கடியை உருவாக்கக் காத்திருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்ட், செனட் குழுவின் முன் பேசுகையில், “பாகிஸ்தானிடம் உள்ள நீண்ட தூரம் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்காவை இலக்கு வைக்கும் திறன் கொண்டவையாக இருக்கலாம்” என்று கவலை தெரிவித்தார்.

மேலும், ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நவீன ஏவுகணைத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும், இது 2035-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவிற்கு 16,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் மற்றும் தாலிபான்களுக்கு இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் பாகிஸ்தான் எதிர்ப்பு பயங்கரவாத அமைப்புகளால் இஸ்லாமாபாத் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், எல்லைப் பகுதிகளில் மோதல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.