ரஷ்யாவிலிருந்து சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த கச்சா எண்ணெய் தாங்கிய பிரம்மாண்ட கப்பலான ‘அக்வா டைட்டன்’, திடீரென தனது பயணப் பாதையை மாற்றி இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பால்டிக் கடல் பகுதியில் இருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட இந்தக் கப்பல், முதலில் சீனாவின் ரிஷாவோ துறைமுகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால், தென் சீனக் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென யு-டர்ன் அடித்து இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரு துறைமுகத்தை நோக்கித் தற்போது வந்துகொண்டிருக்கிறது. இக்கப்பல் வரும் மார்ச் 21-ம் தேதி இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காலிகமாக 30 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தச் சூழலில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சுமார் 30 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வாங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, சீனா செல்ல வேண்டிய இந்தக் கப்பல் தற்போது இந்தியாவுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி அரசியலில் இந்தத் திடீர் மாற்றம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.