மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற நுழைவாயிலில் அமர்ந்து தேநீர் அருந்திய விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாஜாக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், ராகுல் காந்தியின் இத்தகைய செயல் ஒரு தெரு ரவுடி போல இருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் ராகுல் காந்தியின் இத்தகைய போக்கால் நாடாளுமன்றத்தில் உள்ள பெண் பிரதிநிதிகள் மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாவதாகவும், அவர் மற்றவர்களை மரியாதையின்றி நடத்துவதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியைக் கண்டு, கண்ணியமாக நடந்துகொள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சுமார் 84 முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் 116 மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர் அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், கங்கனாவின் இந்த விமர்சனம் மேலும் அனலைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜக தரப்பில் தொடர்ந்து கண்டனங்கள் பதிவாகி வருகின்றன.
