திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இளம் வக்கீலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதாவது திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் கார்த்திக் (27). இவர் வக்கீலாகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரின் வீட்டிற்குள் கார்த்திக் புகுந்துள்ளார். நான்கு குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணுக்கு, கார்த்திக் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதியின் உத்தரவின் பேரில், கார்த்திக் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
