மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் தற்போது உலகின் இரண்டாவது பெரிய வல்லரசான சீனா நேரடியாகக் களமிறங்கியுள்ளது. சீனாவிலிருந்து ‘ஷாப்திஸ்’ மற்றும் ‘பார்ஜி’ என்ற இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கப்பல்களில் வெறும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மட்டுமே இருப்பதாகச் சீனா கூறினாலும், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைத் தயாரிக்கத் தேவையான உயர்தர இராணுவ ரசாயனங்கள் இதில் இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறையும் ஊடகங்களும் சந்தேகிக்கின்றன.

ஈரான் தனது கச்சா எண்ணெயை 90% சீனாவிற்கே விற்பனை செய்வதால், ஈரானின் பாதுகாப்பு சீனாவின் பொருளாதாரத்திற்கு மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்தக் கப்பல்கள் ஈரான் துறைமுகத்தைச் சென்றடைந்தால், போரில் ஈரானின் ராணுவ பலம் பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஒருவேளை அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகள் இந்தக் கப்பல்களைத் தடுத்து நிறுத்த முயன்றால், அது சீனாவுடனான நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் போன்ற நகரங்களைக் குறிவைத்துத் தாக்கி வரும் நிலையில், சீனாவின் இந்த ஆதரவு போரை உலகப்போராக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா தனது பொருளாதார நலன்களுக்காகவும், ஈரானின் மனிதாபிமான தேவைகளுக்காகவும் இந்த உதவியைச் செய்வதாகக் கூறினாலும், சர்வதேச நாடுகள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.