மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு முக்கியச் சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனாவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல், திடீரென தனது பாதையை மாற்றி இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது.
தெற்கு சீனக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்தத் தளம், திடீரென ‘யு-டர்ன்’ எடுத்து இந்தியத் துறைமுகத்தை நோக்கி வருவது செயற்கைக்கோள் தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.
சீனாவை விட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் விலை மற்றும் எளிதான பணப்பரிவர்த்தனை வசதிகளை வழங்க முன்வந்ததே, ரஷ்யா தனது கச்சா எண்ணெயை இந்தியா பக்கம் திருப்ப முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இந்தத் திடீர் மாற்றம் சீனாவிற்குப் பெரும் பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தனது தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு, ரஷ்யாவின் இந்த முன்னுரிமை ஒரு வரப்பிரசாதமாகும்.
ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் நிலவினாலும், இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகத் திரும்புவதும், சீனாவிற்குச் செல்ல வேண்டிய எண்ணெய் இந்தியாவுக்கு வருவதும் உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிலைப்படுத்தப் பெரிதும் உதவும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான போட்டி அதிகரித்துள்ள நிலையில், இந்தியா இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
