ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் தங்கா தோலா கிராமத்தைச் சேர்ந்தவர் தர்பாரி முர்மு. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் தனது மனைவி மகி பாஸ்கி மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இவர்கள் அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த உறவினர்கள் சிலர் தர்பாரி முர்மு மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாங்கள் மறைத்து வைத்திருந்த கோடரியால் சரமாரியாக வெட்டினர்.
இந்தத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தம்பதி மற்றும் அவர்களது சிறுவன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கொடூரக் கொலை குறித்துக் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த தம்பதியினர் மாந்திரீகப் பூசைகள் செய்து சூனியம் வைத்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மூன்று பேரைத் துரிதமாகக் கைது செய்த காவல்துறையினர் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உறவினர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
